×

திருவெள்ளறை சுவஸ்திக் கிணறு :நவீன கட்டுமானத்துக்குச் சான்று

பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மன் நிர்மாணித்த கோயிலாக அறியப்படும் திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோயில் திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. ​ இக்கோயிலின் பின்புற சுவரைக் கடந்து​ செல்லும் பாதையில் நாம் நடந்து சென்றோமென்றால் சற்றே தூரத்தில் தமிழகத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் அமைந்திருக்கும் சுவஸ்திக் வடிவ கிணற்றை நாம் பார்க்க முடியும்.இந்த சுவஸ்திக் வடிவக் கிணறு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. இந்த கிணற்றில் இறப்பிலா வாழ்க்கையைப் பற்றிய பாடல் வரிகள் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த கிணற்றை ‘‘மார்பிடுகு பெருங்கிணறு” என்றும் கூறுகின்றனர். சுவஸ்திக் வடிவில் அமைந்துள்ளதால் இதில் ஒரு துறையில் நீராடுபவர்கள் அடுத்த துறையில் இருப்போரைக் காணமுடியாதபடி நம் முன்னோர்களின் நவீன கட்டுமானத்துக்குச் சான்றாக இது அமைந்துள்ளது.

சுவஸ்திக் வடிவில் நான்கு மூலைகளைக் கொண்டதாக உள்ள இந்த கிணற்றின் நான்குபுறங்களிலும் கீழிறங்க படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நான்கு புறங்களிலிருந்து கிணற்றின் உள்ளே செல்வதற்கு அமைக்கப்பட்ட படிகளில் பல்லவர் கால எண்கள் 1 முதல் 10 வரை இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படிக்கட்டுகள் 3 படிநிலைகளாக அமைந்துள்ளதோடு பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளதோடு கிணற்றின் மேல் பரப்பு சுவரிலும் கல்வெட்டுகள் நிறைந்திருக்கின்றன. அதன் மேல் ஆங்காங்கே நந்தி, நாகர் போன்ற சிற்பங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கிணறு கி.பி. 800ம் ஆண்டில் பல்லவ மன்னன் தந்திவர்மன் ஆட்சிக்காலத்தில் கம்பன் அரையன் என்பவரால் உருவாக்கப்பட்ட கிணறு என்று தொல்லியியல் துறையின் தகவல் குறிப்பு சொல்கின்றது. தந்திவர்மனின் பட்டப்பெயர்களில் ஒன்றான மார்பிடுகுப் பெருங்கிணறு என அறியப்பட்ட விஷயமும் இக்கிணற்றில் சுற்றிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.

The post திருவெள்ளறை சுவஸ்திக் கிணறு :நவீன கட்டுமானத்துக்குச் சான்று appeared first on Dinakaran.

Tags : Tiruvatara Swastik Well ,Thiruvatwaram Pundikatshapurumal Temple ,Pallava Mannan I Narasimman ,Trichy ,
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல்